Tuesday, August 20, 2013

வாலி




காலத்தால் அழிக்க முடியாத 
பல கவிதைகளை பேனாமுனை கொண்டு 
செதுக்கிய கவி சிற்பியே உனை .....
காலன் அழைத்து சென்றாலும் 
தமிழ் எனும் மொழி உள்ளவரை 
அழியாது பட்டொளி வீசி
பிரகாசிக்கும் அய்யா உமது கவி ........!!!

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரதிப்போம்

அதே ஆற்றங்கரையில் !!


விழியிலே விதைத்து உயிரிலே
பூத்தது நம் காதல் நாம் இல்லாமல்
போனாலும் நம் காதல்
பேசப்படும் காவியமாக...
என் காது மடல்கள் தவம் இருக்க
துவங்கிவிட்டன உன் ஒலிகேட்க
என் கருவறையும் காத்திருக்க
துவங்கி விட்டது உன் உயிர் சுமக்க ....
உனக்கான கவிதைகளில் எழுத்தாய்
நான் என்னைத்தான் உதிர்த்து
கொண்டுருக்கிறேன் கண்டு கொண்டாயா
...
பனிப் பெய்த இரவுகளும்
அதிகாலைக் குளிர்ப் புல்லும்
சாட்சி சொல்லும் வாயிருந்தால் …
உன் பார்வையில் தீப்பற்றி
இதயத்தைக் கருக்கிய
ஆயிரத்தோர் இரவில் என்னையும்
உன்னையும் இழந்திருந்தேன் ...
உள்ளுக்குள் எங்கிலும் துக்கம்
பிதுக்கி இழுக்க நார்போல
இதயம் எங்கிலும் உன் நினைவுகள் …
அன்பே நீயும் நானும் காதல்
என்னும் படகில் ஏறி
வாழ்க்கையென்னும்
கடலில் பிரயாணிக்கிறோம்..
கரை சேருமோ இல்லை
கடலில் முழ்குமோ ஆனாலும்
நான் கனவுகள் காண்கிறேன் ...
உனக்கான கவிதைகளில்
என் உயிர் ஊற்றி எழுதுவதால்
உன்னை ஜீவனோடு வந்து சேர்கிறது
உள்மனதில் உனைத் தாங்கி
உனக்கென நானலைந்த நாழிகைள்
முள்ளாகத் தைக்கின்றது எனை
என் சோழனே..
மூவாயிரம் ஆண்டுகள்
காத்திருக்கிறேன்-அன்று
என்னை நீ விட்டு சென்ற
அதே ஆற்றங்கரையில் !!

காதலுடன் பூங்குழலி !!!!!

 

வளைகாப்பு



நமது கலாச்சாரத்தில் கருவிலே உதிப்பது முதல் உருவற்று அழிந்து நீர்த்துப்போகும் மறைவு வரை அத்தனையையும் தெய்வீகமாக நினைத்து கொண்டாடுவதே வழக்கம்.ஏனெனில் நாம் எதையும் முழுவதுமாக முற்றுப்பெறுவதாக நினைப்பதில்லை.எந்த ஒரு சடங்கும் தனி ஒரு மனிதனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டோ கட்டாயத்தின் பெயராலோ பின்பற்றபடுவது இல்லை,
பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை உணர்வுப்பூர்வமாக ஆராய்ந்து அது சரியென எல்லோருமாய் உணரும் போது அது சடங்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது,. அவ்வாறு ஒவ்வொரு பெரியோர்களும் வாழ்ந்து பார்த்து கடைபிடித்த சடங்கே வளைகாப்பு அல்லது சீமந்தம்.

கர்பினிப்பெண்களுக்கு வளைகாப்பு சடங்கு கர்பம் தரித்து ஆறாவது முதல் எட்டாவது மாதம் வரை அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தப்படுவதுண்டு. காரணம் ஆறாம் மாதம் முதல் கர்பகுளத்தில் கவலையின்றி நீந்திக்கொண்டிருக்கும் குழந்தை வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்குகிறது.
உஷ்ணம், குளிர், சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் சகல விஷயங்களையும் குழந்தை கவனிக்கத் துவங்கும்.

எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் குழந்தை நன்றாக கேட்க துவங்குகிறது.ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் கவனத்தை அந்த துவக்கத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம்.அதனால் தான் இச்சடங்கின் போது கர்ப்பமான பெண்ணின் இரண்டு கைகளிலும் பலவை ஒலி எழுப்பக் கூடிய வளையல்களை அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர்,சில குடும்பங்களில் கர்பினிப் பெண்ணின் வயிற்றை விளக்கேற்றி ஆராத்தி எடுப்பார்கள்! காரணம் இருட்டுக்குள் இருக்கும் குழந்தைக்கு வெளிச்சம் காட்டி இதோ நாங்கள் தான் உனது உறவுகள். நன்றாகப் பார்த்துக்கொள். நீ வெளியே வந்தவுடன் உன்னை வரவேற்கப்போகும் சொந்தங்கள் நாங்கள் என்பதை உள்ளே இருக்கும் குழந்தைக்கு உறுதிப்படுத்தும் விதமாக சடங்கு செய்வார்கள்.

அன்னையின் சிறு அசைவினை கூட உணர்ந்து கொள்ளும் அதித சக்தியை ஆண்டவன் நமக்கு கருவிலேயே அளித்துவிட்டான் ,அதனால் தான் குழந்தையாய் சுமக்கும் பெண் நல்லதையே காணவேண்டும் ,சிந்திக்கவேண்டும் ஒரு அன்னையின் எண்ணம் எப்படி இருக்கிறதோ அதை பொருத்துதான் குழந்தையின் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது.
தான் உயிரை கொடுத்து இன்னும் ஒரு உயிருடன் உலகிற்க்கி திரும்பி வருகிறாள் ஒரு பெண் ,
இவர்களுக்கு தகுந்த சூழ்நிலையை உடனிருக்கும் நாம்தான் உருவாக்கி கொடுக்கவேண்டும் .

வண்ண வண்ண வளையல்களை கையில் அடுக்கி அன்னையும் தந்தையும் கருவில் இருக்கும் குழந்தையிடம் என் செல்ல கண்ணா நீ வாழப்போகும் உலகில் இதுமாதிரி பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து போராடவேண்டும் என்று அறிவிக்கும் நாளே சீமந்தம்,

மாத தேதியில் வரவிற்கு அதிகமாய் பட்ஜெட் போட்டுவிட்டு அதைக் கிழித்து போடும் காகிதம் போலே, தேவையில்லை என கலைத்து விட்டுப் போகும் வெறும் சதைப்பிண்டம் அல்ல,அது ஒரு உயிர் நம்மோடு வாழ நம்மவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நம்மை நாடி வந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன். இந்த உன்னதத்தை உணர்ந்து எல்லோரும் ஒன்றாகக் கூடிக் வரவேற்று மகிழ்வதே வளைகாப்பு என்கிற சீமந்தச் சடங்கு . எனவே நமது முன்னோர்கள் காலங்காலமாக கடைபிடித்து வரும் அறிவியல் மற்றும் மனோவியல் ரீதியான அற்புதாமன சடங்கை மதித்துப் போற்றி பாதுகாப்போம்....
நம்மாலே ஒரு அபிமன்யூவை உருவாக்க முடியாது போனாலும் வருங்காலத்தை ஆள நல்லதோர் மனிதனை உருவாக்கவேண்டும் ....

பூங்குழலி ......!!!

வானையும் தொட்டுவிடும் தைரியம் உண்டு ...


வெண்பஞ்சு கையிலே வில்லெதர்க்கு
கூரிய வில்லிரண்டு கயலிலெ
தந்தான் ஈசன் எமக்கு ....

முகிலென்று எண்ணி முன்னே வந்தால்
பிடிச்சம்பலை போவீர் மங்கையர் முன்னே
காதலாலே கோலம்போட்ட
கால் விரல் கொண்டு கயவனின்
குரல்வளை நெறிக்கவும்
தயங்கமாட்டாள் பெண்ணின்று ....

வானையும் தொட்டுவிடும்
தைரியம் உண்டு ...
பூமியையும் பிளந்துபார்க்கும்
வல்லமையுண்டு ....
சாகச பேச்சாலே மதிமயங்க
பெண் பாவையென்று எண்ணினாயோ ?

தென்றலாய் உலாவும்
பெண்ணை சீண்டினால் புயலுக்குள்
அகப்பட்டு புதையுண்டு போவீர்
உமை போன்ற திண்ணைவாழ்
வீணர் உரையால்
விளைவதென்ன?எமக்கு இங்கு...

பரணிலே போட்டுவைத்த கவிதைகள் அல்ல
நாங்கள் உதிரத்தில் செதுக்கிய சிற்பங்கள் .....

காதலுடன் பூங்குழலி .

குழந்தை இன்மை




இன்று குழந்தை இன்மை எனும் குறைபாடு பரவலாக காணப்படுகிறது .இந்த மலட்டுத்தன்மையால் ஆண்,பெண் இருபாலரும் பாதிக்க படுகின்றனர் எனினும் பெண்களை விட ஆண்கள் அதிகமாக பாதிக்கபடுவது கணக்கெடுக்கப்பட்டு உள்ளது ,இது ஒரு நோயல்ல குறைபாடே இதற்கு முக்கிய காரணம் அதிகமான மன அழுத்தம் ,புகை பிடித்தல் ,குடிபழக்கம் போன்றவையே இதற்கு கரணம் ,மாறிவரும் கலாச்சாரம் அறிவியல் வளர்ச்சி ,சுவாசிக்கும்காற்று,உண்ணும் உணவு . மற்றும் ஒரு மறுக்கமுடியாத உண்மை பரஸ்பரம் அன்பு ,விட்டு கொடுக்கும் மனநிலை இன்றைய நமது தலைமுறையினரிடம் அதிகம் காணப்படுகிறது .

அறிவியல் வளர்ச்சி , கல்வி அறிவு ,பொருளாதாரம் வளர்ச்சி இல்லாத முன்னோர்கள் காலத்தில்கூட மலட்டு தன்மை எனும் குறைபாடு இவ்வாளவு அதிகம் இல்லை.

எவ்வளவு செல்வம் இருந்தாலும் மழலை செல்வம் இல்லை என்றால் நம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது .பணம் சம்பாதிப்பதில் இருக்கும் அக்கறையை தங்களது தலைமுறையை உருவாக்குவதில் ஏனோ காண்பிப்பது இல்லை.

இதனாலே பல இல்லங்களில் திருமண பந்தம் முறிவு ஏற்ப்பட்டுவிடுகிறது , விஞ்ஞான வளர்ச்சியில் விண்ணை தொடும் அளவிற்கு வளர்ந்துவிடோம் ஆனால் இன்றைய தலைமுறையினர் தனக்கு உள்ள குறைபாட்டை ஏற்று கொள்ள கூட முன்வருவது இல்லை,

சமுதாயத்தில் வெளிப்படையாக பாலியல் பற்றி பேசினாலே, பேசிய நபரை தவறாக மதிப்பிடும் போக்கு இருந்து வருகிறது. இதனாலேயே பொதுவான பாலியல் பிரச்சினைகளை, தங்களின் சொந்த பாலியல் குறைபாடுகளை கூட யாரும் வெளிப்படையாக பேசி, கேட்டு தெரிந்து கொண்டு தெளிவு பெரும் சூழல் இல்லாமல் இருக்கிறது. இன்று நாம் ஓரளவு பாலியல் விழிப்புணர்ச்சியின் ஆரம்பகட்டத்தில் இருக்கிறோம் என்றே கூறவேண்டும். வெளிப்படையாக பேச பாலியல்ரீதியான தெளிவு பெற மக்கள் முன்னேறி இருக்கிறார்கள்

மருந்துகளை உபயோகப்படுத்துவது ஒரு பக்கம் இருந்தாலும் காணும் இடமெல்லாம் கலப்படம் எனும் அரிதரம் பூசி நிற்கிறது அதிகமான விளைச்சளை பெற வேண்டி அளவிற்கு அதிகமாக பூச்சி கொல்லிமருந்துகளை உபயோக படுத்துவதால் சத்தாக வேண்டிய காய்கனிகள் நச்சாக மாறிவிட்டது ,உயிரை காக்கும் காற்றைக்கூட பிளாஸ்டிக் போன்ற பொருள்களை எரிப்பதால் விஷமாக மாற்றிவிட்டோம் ,இயற்கையாக சமைத்து சாப்பிட்ட காலம் மாறிப்போய் அவசரமான இயந்திர உலகத்தில் நுழைந்ததால் இன்று பாஸ்ட் புட்களில் வேஸ்ட் புட்களை சாப்பிடுகிறோம், பல செயற்கையான ரசாயனம் கலந்த உணவுகளை, அவசர கதியில் சாப்பிடுகின்றோம். நாம் சாப்பிடும் உணவு, இருக்கும் இடம், தண்ணீர் எல்லாமே மாசு படிந்து விட்டது. இத்தகைய சூழலும் இன்று பாலியல் குறைபாடு மக்களிடையே அதிகமாக முக்கிய காரணமாககிவிட்டது .

அறிவியல் முன்னேற முன்னேற நமது நடைமுறை வாழ்கையில் இருந்து உடலாலும் மனதாலும் நம் விலகிவருகிறோம் என்பது துல்லியமாக கணிக்கப்பட்டு உள்ளது ...........

பூங்குழலி .....

வண்ண மடல்


வண்ணதுரிகையில்
வரைந்துவிட்ட வானவில்லாய் ...
துளித்துளியாய் தேன் சேர்க்கும்
மலர்போலே மெதுமெதுவாய்
சித்தத்தில் கலந்தெனை
பித்தாக அலையவிட்டாயே ...
நித்தம் ஒருநிலை தந்து -உன்
நினைவாலே புத்தம் புது
கவிபடைக்க எனை
மாற்றிவிட்ட வித்தகனே

பார்காமலே பூத்த காதலை
விரல் பிடிக்கமாலே பிடித்து
நடந்த நொடிகளை எண்ணி
வாஞ்சையோடு வரையும்
வண்ண மடல் இது
காதலோடு வாசித்திடு
என் மாயவா ....
காதலுடன்
பூங்குழலி

 

அன்னை தமிழ்

சிறு முகிலாய் கார் குழலாட
பிறைபோன்ற நெற்றியிலே
முழுமதி தாங்கி வந்தவளே
கயல் கூட்டம் விழியாக..

அன்னம் போன்ற நடையினிலே
அலையான சிற்றிடை
நளினமாய் நாட்டியம் ஆட
தாமரை வதனம் கண்டு
தரணியெல்லாம் திகைத்து நிற்க ..

சீர் கொண்டு காத்திருந்தோம்
சிங்காரி நின் வருகைக்காய்
தளுக்கி மினுக்கி தளிராக
தங்க சிலைபோலே ஆடியுடன்
ஆடிவந்த அன்னையே
நின் பாதம் தொட்ட இடமெல்லாம்
வண்ணம் மாறி மிளிருதம்மா...

அதை கண்டவுடன் சொற்பூக்கள்
என்னுள் மலர கவிதையாக
ஊற்றெடுதாய் தமிழன்னையோடு
கரம் கோர்த்து ..!!!

உன் மீது காதலுடன் பூங்குழலி

முதுமை


தான் பெற்றவன் உயர
உயிரை தந்த உறவு
உறவின்றி தெருவில்

ஒருவேளை உணவிற்கு
உழைக்கும் நிலையில்
பத்துமாதம் தான் சுமந்த
கன்றின் துணையின்றி
ஊன்றுகோலே உற்ற
துணையாக ஏங்கி கிடக்க

இங்கே மடிதந்தவள் மரணத்தை
எதிர்நோக்கி காத்திருக்கிறாள்
மடியிலே தவழ்ந்தவன் 
எங்கோ மகிழ்ந்திருக்க

பூங்குழலி



கயற்கொடி கொண்ட கண்ணாளன்


கனிக்குள் சிறைகொண்ட விதையாய்
நின் மார்பில் மலர்ந்த
தாரகையின் தளிர்கரம் பற்றிட
நாளாகுமோ ?
சேற்றில் சிக்கிய களிறெனவே
பாலையிலே வெண்ணையாய்
உருகுகிறாள் பாவை

மழைகண்ட மயிலாய் தோகையாள்
நிலை கண்டு கல்லும்

கசிந்துருகி அலைபுரண்டு ஓடுதையா
முகில்கொண்டு நாணம் துடைக்கும்
நிலவழகி நிலைகண்டு
கடல்குளித்த முத்தும் வண்ணம் மாறியதோ ?
கெண்டையிடம் சிக்கிய துண்டில்
புழுவாய் இடை சிறுத்து
இமைமெலிந்து விட்டாள்

கடைவிழியோரம் காதலெல்லாம் 
சேர்த்து வைத்து காத்திருக்கும்
வஞ்சியின் வாடை தாங்கிய
மடல் கண்டதும்…


கயற்கொடி கொண்ட கண்ணாளன்
வருவனோ ? படைதிரட்டி

- காதலுடன் பூங்குழலி


சுதந்திர தின வாழ்த்துக்கள்-2013


மின்னலை போலே
இன்னல் பல கண்டனர் 
இனி விடியலில்லை என்றபோதும் 
விடியலை நோக்கி சென்றனர் 
தடைகள் பல வந்தபோது
தயங்கவும் இல்லை தளரவும்யில்லை
நல்லோர் பலரை இழந்து
நள்ளிரவில்
கண்டனர்
விடியலை ...

தம் உதிரத்தில் திரியிட்டு
சுதந்திரம் எனும் அகல்விளக்கை
இளையோர் நம் கையில் கொடுத்துள்ளனர்
இவர்களின் தியாகத்தை உணர்ந்து
நமது தேசத்தின் ஒவ்வொரு
வளர்ச்சியும் தாழ்ச்சியும்
நம் அனைவரது வாழ்க்கையிலும்
பிரதிபலிக்கும் படி செய்வோம் .....


உலகில் உயர்ந்தது நம் நாடு 
நமை சுரண்டும் தீய சக்திகளை 
அடையாளம் கண்டு அகற்றுவோம்
தடைகளற்ற மேகத்தை வானில் கொண்டு 
நம் அடுத்த தலைமுறையினருக்கு
நல்லதோர் நாட்டை பரிசளிப்போம் 
இச்சுதந்திர காற்றை ஸ்வாசிக்க 
தந்தோருக்கு நன்றயுரைப்போம் .....!!!!

நண்பர்கள் அனைவர்க்கும் 
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 

பூங்குழலி

Monday, June 24, 2013

உனக்குள்ளே நான்




வசந்ததிலும் உதிரும் சில இலையாய்,
பௌர்ணமியிலும் முகம் மறைக்கும் முழுநிலவாய் 
தொலைந்து விட்டேன் உனக்குள்ளே நான்

காதலுடன் பூங்குழலி

Sunday, June 23, 2013

உனை சுமக்கும் மற்றொறு கட்டிலாய்...!!


அதிகம் பேசாத உன்விழிகளில்
அடிக்கடி தேடிபார்த்திருக்கிறேன்
என் மீது நீ கொண்டது காதலா ?காமமா ?
தொடங்கும் முன்னே முடித்து விடுவாய்
உணரும் முன்னே உறங்கி விடுவாய்
உனை சுமக்கும் மற்றொறு கட்டிலாய்
விழித்து கொண்டிருக்கிறேன்
உன் பக்கத்தில்

உன் தேடலுக்கு நானா? இல்லை
நம் உணர்வுகளுக்கு நாமா
முண்டியடித்து வெளிவரும்
வார்த்தைகளை முடிக்கும் முன்னே
விசிறிவிட்டு போகும் போர்வையை போலே
உதறிவிட்டு போய் விடுகிறாய் என்னை


உன் நெற்றியில் துளிர்த்த வியர்வை
துளிகளை கணகிட்டபடியே
மௌனமாகி ;போய்விடுகிறோம்
நானும் கட்டிலும் 

எழுத்துகளில் ஒளிந்திருக்கும்
என் உதிரம் உருண்டோடுகிறது
விடியல் தேடியல்ல
விடை தேடி

காதலுடன் பூங்குழலி

இசையே...


காதோரம் வந்து செல்ல
கொஞ்சலாய் குலைந்து கோடி
மின்னலை கொட்டிவிடுகிறாய்

காற்றாய் கரையவைக்கிறாய்
ஊற்றாய் ஓட வைக்கிறாய்
நுரையை பூக்கவைக்கிறாய்
காயை கனியவைக்கிறாய்
வண்டுதுளையிட்ட புண்ணிலும்
பாமாலை வடிக்கிறாய் 

நாவிலே கரைகிறாய் அமிர்தமாய்
நாசியிலே சிக்குகிறாய் வாசமாய்
விழியிலே தெரிக்கிறாய் வானவில்லாய்

செவியிரண்டும் காத்திருக்க
உரோமம் யெல்லாம் புல்லரித்து எழுந்துநிற்க
இமைகள் தாழ்ந்து கம்பளம் விரிக்க
இதழ்யிரண்டும் இமைக்க மறக்க
வையத்தை ஆளுகிறாய் அழகாய்
நீயில்லை யெனில்
மீன்கலற்ற நதிபோலே
அலைகள் யில்லா கடல்போலே
மயானமாகிவிடுகிறது
மனிதன் வசிக்கும் புவி.
உனக்குத்தான் எத்தனை
ராஜமரியாதை இசையே 

இசையே உன் மயிற்ப்பீலி
விரல்கொண்டு என் மனதை தழுவு
மரணித்து விடுகிறேன் உன்மடியிலே

காதலுடன் பூங்குழலி

கவிதைக்காரி


கவிதைகளை கிறுக்குவதால்
நானொன்றும் கவிதைக்காரியில்லை
எனை நானே நேசிக்கிறேன் அதனாலே
என் வாழ்வின் எல்லா பக்கங்களையும்
சுவாசிக்கிறேன்

உணர்வுகளை ஊற்றி
சுவாசித்ததையும் நேசிதத்தையும்
கிறுக்குகிறேன் வெற்றுத்தாள்களில்

பூக்கும் சிந்தனை பூக்களை
மாலையாக கோர்க்கிறேன்
ஒரு பூக்காரியாய்

ஆனால் கவிதைகளை கிறுக்குவதால்
நானொன்றும் கவிதைக்காரியில்லை



காதலுடன் பூங்குழலி

நினைவிழக்கிறது என் பெண்மை


கட்டியணைத்து யென் காதருகே
சிதறி செல்லும் நின்
மெல்லிய ஸ்பரிசங்கள்

மொளனமாய் பேசிய
கவிதைகள் யெல்லாம்
குழலுக்குள் புகுந்த காற்றாய் வருட
உன் தூண்டலுக்குள்
சிக்காமலே நினைவிழக்கிறது
என் பெண்மை

காதலுடன் பூங்குழலி !!!!

உன்முத்தம் என்முத்தம் இது நம் முத்தம்


எண்ணத்தை எழுத்தாக பனியென கசிந்துருகி
பகிரங்கமாகப் பதித்து ஆண்கள்
பலர் மத்தியில் பேசப்படும்போது, ஏன் ?
பெண்களின் எண்ணங்களை மட்டும்
புழுதி அளவு கூடப் பேசப்படுவது இல்லை .

ஆண்களின் எழுத்தை கலையோடு மட்டுமே
இணைத்து நோக்கும் ஆணினம்
பெண் நுண்மையான காதலை கவிதையென
படைத்தால் அதை காமத்தின்
நுண்வடிவம் என்றே
ஏற்றுகொள்ள காரணம் என்ன ?
ஒருவேளை எங்களது எழுதும் எண்ணமும்
உங்களது அறிவிற்கு எட்டாமல் இருக்குமோ?

முத்ததில் உண்டோடி
உன்முத்தம் என்முத்தம்
இது நம் முத்தம் என்று
முழங்கும் ஆண் மனம்
வெற்றியில் உண்டோ
உன் வெற்றி என் வெற்றி
இது நம் இனத்தின் வெற்றியடி என்று
ஏன் ?ஏற்றுகொள்ள மறுக்கிறது

படைத்தவன் ஆண்டவனாகவே இருக்கட்டும்
ஆனால் பெண்ணில்லை யெனில் இவ்வையகத்தில
மனிதன் என்றொரு இனம் இருக்க வாய்ப்பில்லை
உன்னை சுமந்தவள் உனை விட உயர்ந்தவள்

எமக்கு எதிராக உம்மிடம் இருந்து வரும்
ஒவ்வொரு வார்த்தைகளும்
புழுக்களின் ரீங்காரமாகவே கேட்கிறது
அதனால் முடித்து கொள்ளுங்கள்
இன்றோடு உங்களது கூப்பாடை 

காதலுடன் பூங்குழலி

 

மதியிலே ஒளியில்லாத குருடர்கள்


விழியிலே ஒளியில்லை கொடுக்க
தவறிய ஆண்டவனை
வெறுத்ததில்லை
மதி கொடுத்த ஒளியாலே
பயணிக்கிறோம் யாருக்கும் பாரமின்றி
எங்களது பாதையில்
வண்ணங்களை கண்டதில்லை
வாரி வாரி பூசியதில்லை ஆனால்
அதை நேசிக்கிறோம்
வானவில்லை பார்த்ததில்லை அதிலே
பயணிக்கின்றோம் வண்ணமயமாய்
மனிதர்களின் முகம் கண்டதில்லை
ஆனாலும் நேசிக்கிறோம்
பாவம் அவர்கள் மதியிலே
ஒளியில்லாத குருடர்கள்


காதலுடன் பூங்குழலி 

எமை ஆளும் மீனாட்சி



பாலையில் படர்ந்த பசுந்தலையாய்
உம் மார்பினில் நான் படர
முகில் போலே நெளிந்தாடும் -
எம் கார்குழல் யெடுத்து
யாழ் மீட்டுவாயோ ...!!

இதழ் திறக்கா மலராய்
இமை திறவாமல் தவமிருப்பேன்
உம் பாதம் நான் காண ...!!
வானுக்குள்ளே சென்று
நீர் மறைந்தாலும் மின்னலேன்றே
எனை அழித்து உனை சேருவேன் ...!!

பதம் தூக்கி நடமாடும் சொக்கனாய்
நீர் மாரிபோனாலும்
உமை ஆளும் மீனாட்சியாய்
வடிவம் தாங்கியே நின் பதியாவேன்
என்னுள்ளே யாதுமானவனே ..!!

காதலுடன் பூங்குழலி !!!

வாழ்கையின் பக்கங்கள்


உரியில் உப்பிருந்தும்
கறியில் உப்பிடவில்லை
உப்பிட்டு உண்டால் எங்களின்
உணர்வுகள் உயிர்ப் பெற்று
விடுமோ எனும் பயமில்லை ..!!

உணர்வுகள் மரத்து போயினும்
உரிமைகள் களவு போயினும்
எங்களது வாழ்கையின் ஒவ்வொரு
வரிகளிலும் நாங்கள் வாழ்கிறோம் .....!!

வாழ்கையின் பக்கங்களை
காசுகொடுத்து வாங்கியும்
வாழவழியின்றி தவிக்கும்
பணம் கொண்டோரே ...!!

எத்தனை காலம் போன பின்னும்
எங்கள் நிலைமாட்டும் மாறவில்லை
கிடைத்து எல்லாம் தனக்கென
நினைக்கும் மனிதன் ஒழியும் நாளே ....
எங்களின் ஏழ்மை நிறம் மறையும் நாள் ....!!!

காதலுடன் பூங்குழலி !!!

Tuesday, May 28, 2013

உயிர்கிழிந்து தலைகுனிந்தாள்


வறுமையிலே 
உடுப்புக்கிழிசல் வழியே உடல் தெரிய
ஆணினம் தன்னுடல் பார்க்க 
"உயிர்கிழிந்து தலைகுனிந்தாள்" ஏழைப்பெண்

ஆணினத்தை கவர செயற்கை
கிழிசல் பலசெய்து தனைமறந்து
மயங்கி நாகரீகம் எனும் போதை
மேடையிலே மேலைபெண் ..!!

கிழிசலுக்கு பயந்து ஒருத்தி..!!
கிழிசலுக்கு துணிந்து ஒருத்தி..!!
இத்தையல்களின் தையலை
தைக்க வழியுண்டோ ஏதேனும்..??

கேள்விகள்மட்டும் உண்டு இங்கு
விடைகள் மொத்தமாய் எங்கோ...????

- காதலுடன் பூங்குழலி !!!!

Monday, May 27, 2013

விதவையின் கனவு


பல இரவுகளில் இதயம்துடிக்க
ஒரே கனவை கண்டுருக்கிறேன்
வண்ணத்திலே வந்த கனவினை
வார்த்தையாக்க முடியாமல்
நீ வந்ததற்கு சாட்சியாக
உதிர்ந்த பூக்களையும்
உடைந்த வளையல்களை மட்டும்
இன்னும் பாத்திரமாக வைத்திருக்கிறேன்

காதலுடன் பூங்குழலி 

 

Sunday, May 26, 2013

அக்கா


வீட்டிலே அவளிடத்தை பிடித்து
கொண்டதற்கு கொள்ளை கோவம் கொண்டிருந்தாலும்
அதை என்னிடம் காட்டியதில்லை
உறங்கும் போது பக்கம் அமர்ந்து
முகம் நோக்குவாள்
விழித்ததும் கிள்ளிவிட்டு ஓரம் நின்று
கவனிப்பாள் ஆனால் ஒருபோதும் என்
அழுகையை விரும்பியது இல்லை

எனை வயிற்றில் சுமக்கவில்லை
மடியில் சுமந்திருகிறாள் 
அன்னையை போலே மார்பில் பாலுட்டவில்லை
அன்னையாய் மாறி அணைத்திருக்கிறாள் 

என்னை நிழல் போலே தொடரும்
கண்காணிப்பாளர் அவள்
அக்கா என்றதும் ஓடிவந்து கட்டிகொள்வாள்
சிறிதும் தயக்கம் இன்றி சொல்கிறேன்
நீ என் மழலை அன்னையடி


காதலுடன் பூங்குழலி

உன் நினைவு அலைகள்


வானம் வரைந்து வைத்த துரிகை போலே
வண்ணமயமாய் உன் நினைவுகள்

வெளிச்சங்களை தின்றுவிட்டு
கருமையை பூசி காத்திருக்கும்
மழை மேகம் போலே
எப்பொழுதும் பொழியத் தயராய்
என்னுளே உன் எண்ண மழைகள்
தொடுவதும் விடுவதுமாய்
என் மனதின் கரைகளை அரித்து செல்லும்
உன் நினைவு அலைகள்
கண்ணில் படாமல் சுவாசம் தரும்
காற்றைப்போல்
எப்பொழுதும்
என்னக்குள் அணைதிருக்கும் உன் வாசம்

இப்படி முழுமை பெறாத பல இரவுகளை
கடந்த பின்னும் காத்திருக்கிறேன்
உன் விரல் தீண்டலுக்கு

காதலுடன் பூங்குழலி
….

அணைக்க அன்னையின்றி



வெள்ளை சிரிப்பினிலே எனை
கொள்ளைகொண்ட கொள்ளைகாரனே
பட்டு பாதமதில் ஆயிரம்முறை
எட்டி உதைத்தாலும் மறுபடியும்
பாதம் பட காத்திருக்கிறதடா என் கன்னம்
எச்சில் நீரொழுகும் ஈரா இதழாலே
நெற்றியெல்லாம் கோலமிட்ட
என் அழகு கண்ணனே

உனை கருவறையில் நான் தாங்க
என்னதவம் செய்தேனோ ..!!
என்று கட்டி அணைக்க அன்னையின்றி
நித்திரையிலேயே (கனவிலே )
நிதமும் நான் வளர
என்ன பாவம் செய்தேனோ

காதலுடன் பூங்குழலி

தோழி நின் நினைவில்



சேற்றில் சிக்கிய களிறெனவே
தவிக்கிறேனடி தோழி
நின் நினைவில்

காடுமலை சோலைதனில்
காற்றாக கரம்பிடித்து
மயிலோடு ஜோடி சேர்ந்து நடமாடி
வென்றோமே நினைவிருக்கா
.??

நந்தவன மலர்பறித்து அதைபோலே
உனைதாங்க நல்லான் ஒருத்தன்
நாதனாய் வர
உனக்கு நானும் எனக்கு நீயும்
வேண்டி நின்று.. நாராயணனின் பாதம்
பணிந்தோமே நினைவில்லையா
..??

அருவிக்கரையோர கயலெல்லாம்
என் நிலைகண்டு கலங்குதடி என் தோழி
நாம் நின்ற இடம், நடந்த இடமெல்லாம்
நம் நினைவுகளை சுமந்த படி
நிற்குதடி என் தோழி

வில்லென்ற விழியினிலே நீரோடு
மணமாலை சுமந்து போனவளே
..!!

அரசமரத்தடி குயிலும் இசைபாட மறந்ததடி
மாமரத்து வண்டும் சப்தமின்றி போனதடி
..!!
விடியலிலே கண்ட கனா பலிக்கும் என்றே
நம் இறந்த காலம் சென்று பார்கிறேன்
கண்டதிலே நாலிலே ஒன்றிரண்டு
பலித்திடாதா என் அன்பு தோழி

காதலுடன் பூங்குழலி !!!!
 

நர்த்தகியின் நடராஜனே



ஒற்றை சங்கேந்தி உடலெல்லாம் திருநீறுபூசி
பித்தனாய் உனை மாற்றி உலகை வலக்கையிலே
தாங்கி நிற்கும் உலகநாதா

உயிர்கொண்ட நிலவாக உம் மீது படர்ந்திருக்க
மார்போடு எனை அணைத்து

என்னுள்ளே குடிகொண்டு
எம் ஒருபாதி தனதாக்கி

வெண் பனி பூதூவ செந்தாமரையாய் முகம் மலர
நீயின்றி நானில்லை உமையவளே என்றெனை
தன்னுளே கொண்டவனே

கங்கையை சுமந்திருக்கும் கொற்றவனே
நர்த்தகியின் நடராஜனே

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உனையன்றி வேறேதும் கதியில்லை எமக்கு

காதலுடன் பூங்குழலி
…..

இனியும் தாமதியாதே பெண்ணே



மேண்மை பெற்ற ஆண்கள் மத்தியிலே
சிறுமை உள்ளம்
கொண்ட கள்ளிசெடிகளும் 

இருப்பது  இயற்க்கையடி பெண்ணே
கலங்காதே
மூலையில் முடங்காதே தூற்றுவோரை கண்டு
துயர்கொள்ளதே
துணிந்துநில்

முடக்கிவிட்டதாய்
மீசைமுறுக்குவோர் முன்னே
சாதனைகள் படைத்திடு
சரித்திர ஏட்டிலே
உன் பெயரையும்
பதித்திடு
பெண்ணே
உனை தூற்றுவூர் சிலர்தான்
போற்றுவூர்
தரணியெங்கும் உள்ளனர்
தயக்கத்தை உடைத்திடு
காற்றுபுக இடைவெளியும்
உன் கால்பதிக்க காத்திருக்கிறது
இனியும்
தாமதியாதே

காதலுடன்
பூங்குழலி

Wednesday, April 24, 2013

நர்த்தகியின் நடராஜனே


ஒற்றை சங்கேந்தி ஏந்தி உடலெல்லாம் திருநீறுபூசி
பித்தனாய் உனை மாற்றி உலகை வலக்கையிலே
தாங்கி நிற்கும்
உலகநாதா
உயிர்கொண்ட நிலவாக உம் மீது படர்ந்திருக்க
மார்போடு எனை அணைத்து
.....

என்னுள்ளே குடிகொண்டு
எம் ஒருபாதி தனதாக்கி
....

வெண் பனி பூதூவ செந்தாமரையாய் முகம் மலர
நீயின்றி நானில்லை உமையவளே என்றெனை
தன்னுளே கொண்டவனே
....

கங்கையை சுமந்திருக்கும் கொற்றவனே
நர்த்தகியின் நடராஜனே
....

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உனையன்றி வேறேதும் கதியில்லை
எமக்கு

காதலுடன் பூங்குழலி !!!!!

இயற்கை அன்னை



சிந்திச்சிதறிய சிறு துளியெல்லாம் சேர்த்து
மோகத்தோடு மேகத்தில் வைத்து 
தூதனுப்பினேன்
ஆகாய தலைவனுக்கு

மோகத்தோடு வேகமாய் மேகத்தை முத்தமிட்டு
பெரு மழை துளியாக சிதறவிட்டான்
காதலை எம்மேனியில்...

மேனிநனைய நனைய உம் உயிர்வாங்கி
பசுமையாக படர்ந்து நின்றேன்
பாரெல்லாம் செழித்து நின்றேன் வனமாக

கள்வனைபோலே மாசு வந்து
கார்மேகத்தை கலைத்ததால்
தூதுவிட ஏதுமின்றி வெற்றுக்காகிதமாய்
பற்றிஎரிய தேகம் காய்ந்து விட்டது

மார்தந்து தாகத்தை தீர்த்தவள்
வேதனையில்
கொதிக்கின்றாள்
உயிர் தந்த உத்தமியை
ஊடுருவி
சுரண்டுகிறோம்
என்பதை உணர்வாய
மானிடா..??

போர் கால சூழல் போல
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
உன்
போலியான தேவைநோக்கி

நீ வாழ எனைத்தந்தேன் நீயோ சுயநலமாய்
எனை அழிக்க
தயரகிவிட்டாய்

ஓலமிட்டு கதறுகிறேன் அலட்சியம்
செய்யாதே..!!
இயற்கையெனும் அன்னை நானில்லை
யென்றால்
 உலகில் நீ வாழும் நாட்கள் கூட குறைந்துவிடும்

காதலுடன் பூங்குழலி

Wednesday, April 17, 2013

காற்றெனும் கயவனே



பாழிருள் நீக்கும் பகலலை போலே
எம் வாழ்விருள் நீக்க வந்த காவலனே…

கண்வழி புகுந்து
கனவென மலர்ந்த
காற்றெனும் கயவனே

விம்தித் தாழ்ந்த வெண்மார்பில் விலங்கிட்டு உமை பூட்ட
கண்ட மலைவீழ் அருவியும் மாமுகில் போர்த்தக் சுனைநீர் கயலும் 
தம் விழியிரண்டை மூட

உம் வீரம் கண்ட மேனி நிறம் மாற
வாலைபூவென நாணிநிற்கும் ஏந்திழையாழை
கண்டு நகைக்கும் ஏந்தலே

மங்கைநல்லாள் நிலமாக மீண்டும்
நீர் மழையாய்வருவீரோ

காதலுடன் பூங்குழலி

Tuesday, April 16, 2013

உளறலாய் ஆயிரம் கவிதைகள்




உயிர் நீயென்று ஆனப்பின்னே 
உனை மறக்கும் துணிவு எனக்கில்லை....
 
உன் நினைவு 
உதிரத்தோடு கலந்து விட்டது 
என்னுயிரை உதறும் வரை 
பயணிக்கும் உணர்ந்துகொள்....

உளறலாய் ஆயிரம் கவிதைகளை கொட்டிதிர்க்கிறேன்
நீ உணர்ந்தயா ..??

உனை கண்ட விழியிரண்டும் எனைக்கூட
காணமல் மருகுகிறது..!!

வருங்காலம் எப்படி விடியுமென்று..? 
இமை திறக்கமால் இருளுக்குப் பழக்கப்பட முயன்றால்
விசமம் செய்கின்றனவிழிகள்

இமையோரம் எட்டிப் பார்க்கும்
விழிநீரும்... ஏக்கமாய் பார்கிறது
உனை சுமக்கும் 
என் காதலை...

காதலுடன் பூங்குழலி ...