Monday, June 24, 2013

உனக்குள்ளே நான்




வசந்ததிலும் உதிரும் சில இலையாய்,
பௌர்ணமியிலும் முகம் மறைக்கும் முழுநிலவாய் 
தொலைந்து விட்டேன் உனக்குள்ளே நான்

காதலுடன் பூங்குழலி

Sunday, June 23, 2013

உனை சுமக்கும் மற்றொறு கட்டிலாய்...!!


அதிகம் பேசாத உன்விழிகளில்
அடிக்கடி தேடிபார்த்திருக்கிறேன்
என் மீது நீ கொண்டது காதலா ?காமமா ?
தொடங்கும் முன்னே முடித்து விடுவாய்
உணரும் முன்னே உறங்கி விடுவாய்
உனை சுமக்கும் மற்றொறு கட்டிலாய்
விழித்து கொண்டிருக்கிறேன்
உன் பக்கத்தில்

உன் தேடலுக்கு நானா? இல்லை
நம் உணர்வுகளுக்கு நாமா
முண்டியடித்து வெளிவரும்
வார்த்தைகளை முடிக்கும் முன்னே
விசிறிவிட்டு போகும் போர்வையை போலே
உதறிவிட்டு போய் விடுகிறாய் என்னை


உன் நெற்றியில் துளிர்த்த வியர்வை
துளிகளை கணகிட்டபடியே
மௌனமாகி ;போய்விடுகிறோம்
நானும் கட்டிலும் 

எழுத்துகளில் ஒளிந்திருக்கும்
என் உதிரம் உருண்டோடுகிறது
விடியல் தேடியல்ல
விடை தேடி

காதலுடன் பூங்குழலி

இசையே...


காதோரம் வந்து செல்ல
கொஞ்சலாய் குலைந்து கோடி
மின்னலை கொட்டிவிடுகிறாய்

காற்றாய் கரையவைக்கிறாய்
ஊற்றாய் ஓட வைக்கிறாய்
நுரையை பூக்கவைக்கிறாய்
காயை கனியவைக்கிறாய்
வண்டுதுளையிட்ட புண்ணிலும்
பாமாலை வடிக்கிறாய் 

நாவிலே கரைகிறாய் அமிர்தமாய்
நாசியிலே சிக்குகிறாய் வாசமாய்
விழியிலே தெரிக்கிறாய் வானவில்லாய்

செவியிரண்டும் காத்திருக்க
உரோமம் யெல்லாம் புல்லரித்து எழுந்துநிற்க
இமைகள் தாழ்ந்து கம்பளம் விரிக்க
இதழ்யிரண்டும் இமைக்க மறக்க
வையத்தை ஆளுகிறாய் அழகாய்
நீயில்லை யெனில்
மீன்கலற்ற நதிபோலே
அலைகள் யில்லா கடல்போலே
மயானமாகிவிடுகிறது
மனிதன் வசிக்கும் புவி.
உனக்குத்தான் எத்தனை
ராஜமரியாதை இசையே 

இசையே உன் மயிற்ப்பீலி
விரல்கொண்டு என் மனதை தழுவு
மரணித்து விடுகிறேன் உன்மடியிலே

காதலுடன் பூங்குழலி

கவிதைக்காரி


கவிதைகளை கிறுக்குவதால்
நானொன்றும் கவிதைக்காரியில்லை
எனை நானே நேசிக்கிறேன் அதனாலே
என் வாழ்வின் எல்லா பக்கங்களையும்
சுவாசிக்கிறேன்

உணர்வுகளை ஊற்றி
சுவாசித்ததையும் நேசிதத்தையும்
கிறுக்குகிறேன் வெற்றுத்தாள்களில்

பூக்கும் சிந்தனை பூக்களை
மாலையாக கோர்க்கிறேன்
ஒரு பூக்காரியாய்

ஆனால் கவிதைகளை கிறுக்குவதால்
நானொன்றும் கவிதைக்காரியில்லை



காதலுடன் பூங்குழலி

நினைவிழக்கிறது என் பெண்மை


கட்டியணைத்து யென் காதருகே
சிதறி செல்லும் நின்
மெல்லிய ஸ்பரிசங்கள்

மொளனமாய் பேசிய
கவிதைகள் யெல்லாம்
குழலுக்குள் புகுந்த காற்றாய் வருட
உன் தூண்டலுக்குள்
சிக்காமலே நினைவிழக்கிறது
என் பெண்மை

காதலுடன் பூங்குழலி !!!!

உன்முத்தம் என்முத்தம் இது நம் முத்தம்


எண்ணத்தை எழுத்தாக பனியென கசிந்துருகி
பகிரங்கமாகப் பதித்து ஆண்கள்
பலர் மத்தியில் பேசப்படும்போது, ஏன் ?
பெண்களின் எண்ணங்களை மட்டும்
புழுதி அளவு கூடப் பேசப்படுவது இல்லை .

ஆண்களின் எழுத்தை கலையோடு மட்டுமே
இணைத்து நோக்கும் ஆணினம்
பெண் நுண்மையான காதலை கவிதையென
படைத்தால் அதை காமத்தின்
நுண்வடிவம் என்றே
ஏற்றுகொள்ள காரணம் என்ன ?
ஒருவேளை எங்களது எழுதும் எண்ணமும்
உங்களது அறிவிற்கு எட்டாமல் இருக்குமோ?

முத்ததில் உண்டோடி
உன்முத்தம் என்முத்தம்
இது நம் முத்தம் என்று
முழங்கும் ஆண் மனம்
வெற்றியில் உண்டோ
உன் வெற்றி என் வெற்றி
இது நம் இனத்தின் வெற்றியடி என்று
ஏன் ?ஏற்றுகொள்ள மறுக்கிறது

படைத்தவன் ஆண்டவனாகவே இருக்கட்டும்
ஆனால் பெண்ணில்லை யெனில் இவ்வையகத்தில
மனிதன் என்றொரு இனம் இருக்க வாய்ப்பில்லை
உன்னை சுமந்தவள் உனை விட உயர்ந்தவள்

எமக்கு எதிராக உம்மிடம் இருந்து வரும்
ஒவ்வொரு வார்த்தைகளும்
புழுக்களின் ரீங்காரமாகவே கேட்கிறது
அதனால் முடித்து கொள்ளுங்கள்
இன்றோடு உங்களது கூப்பாடை 

காதலுடன் பூங்குழலி

 

மதியிலே ஒளியில்லாத குருடர்கள்


விழியிலே ஒளியில்லை கொடுக்க
தவறிய ஆண்டவனை
வெறுத்ததில்லை
மதி கொடுத்த ஒளியாலே
பயணிக்கிறோம் யாருக்கும் பாரமின்றி
எங்களது பாதையில்
வண்ணங்களை கண்டதில்லை
வாரி வாரி பூசியதில்லை ஆனால்
அதை நேசிக்கிறோம்
வானவில்லை பார்த்ததில்லை அதிலே
பயணிக்கின்றோம் வண்ணமயமாய்
மனிதர்களின் முகம் கண்டதில்லை
ஆனாலும் நேசிக்கிறோம்
பாவம் அவர்கள் மதியிலே
ஒளியில்லாத குருடர்கள்


காதலுடன் பூங்குழலி 

எமை ஆளும் மீனாட்சி



பாலையில் படர்ந்த பசுந்தலையாய்
உம் மார்பினில் நான் படர
முகில் போலே நெளிந்தாடும் -
எம் கார்குழல் யெடுத்து
யாழ் மீட்டுவாயோ ...!!

இதழ் திறக்கா மலராய்
இமை திறவாமல் தவமிருப்பேன்
உம் பாதம் நான் காண ...!!
வானுக்குள்ளே சென்று
நீர் மறைந்தாலும் மின்னலேன்றே
எனை அழித்து உனை சேருவேன் ...!!

பதம் தூக்கி நடமாடும் சொக்கனாய்
நீர் மாரிபோனாலும்
உமை ஆளும் மீனாட்சியாய்
வடிவம் தாங்கியே நின் பதியாவேன்
என்னுள்ளே யாதுமானவனே ..!!

காதலுடன் பூங்குழலி !!!

வாழ்கையின் பக்கங்கள்


உரியில் உப்பிருந்தும்
கறியில் உப்பிடவில்லை
உப்பிட்டு உண்டால் எங்களின்
உணர்வுகள் உயிர்ப் பெற்று
விடுமோ எனும் பயமில்லை ..!!

உணர்வுகள் மரத்து போயினும்
உரிமைகள் களவு போயினும்
எங்களது வாழ்கையின் ஒவ்வொரு
வரிகளிலும் நாங்கள் வாழ்கிறோம் .....!!

வாழ்கையின் பக்கங்களை
காசுகொடுத்து வாங்கியும்
வாழவழியின்றி தவிக்கும்
பணம் கொண்டோரே ...!!

எத்தனை காலம் போன பின்னும்
எங்கள் நிலைமாட்டும் மாறவில்லை
கிடைத்து எல்லாம் தனக்கென
நினைக்கும் மனிதன் ஒழியும் நாளே ....
எங்களின் ஏழ்மை நிறம் மறையும் நாள் ....!!!

காதலுடன் பூங்குழலி !!!