Saturday, April 13, 2013

இன்று போய் நாளை சொல்லுகிறோம்


வண்ண பட்டு உடுத்தி உச்சியிலே சாந்திட்டு
மணம் மாற மல்லிகை பூச்சுட்டி மங்களமாக
மனம் நிறைய கனவுகளை சுமந்தபடி
வாசலிலே விழியிருத்தி காத்திருந்தேன்

பட்டு வேட்டி சரசரக்க மிடுக்காய் வந்தவனை
நாணத்தோடு பார்த்துவிட்டு காத்திருக்க
சமையலறை கதவிடுக்கில் காதைவைத்து
இல்லாத கடவுளையெல்லாம்
வேண்டி நிற்க்கும் அம்மா

போய் சொல்கிறோம் என்று
சொல்லிவிட்டு போனவர்களின் தடம் கண்டு
பரிதாபமாக நிற்கும் அப்பா

இவர்களுக்கு தெரியுமா ?
ஒப்பனைகளுக்கு பின்னே
ஒப்பனை இல்லாமல்
ஒரு மனது ஓலமிட்டு கதறுவது

இன்று போய் நாளை சொல்லுகிறோம்
என போனவர்களை
பேய் காற்று கொண்டுபோனதோ
போனயிடம் தெரியவில்லை

நிறமில்லா கனவுகளை நிதமும் நான் காண
நிலை கண்டு கலங்கும் அன்னையே
கள்ளமில்லா பருவத்திலே
கள்ளிப்பால் கொடுத்திருக்கலாம்
நாசியிலே நெல்லிட்டு நயமாக முடித்திருக்கலாம்
இப்படி அலங்கரித்தே நான் அலுத்துப்போக

காதலுடன் பூங்குழலி ..!!!

No comments:

Post a Comment